தமிழ் கிறிஸ்தவர்கள்

 மின்னிதழ்

 

 

முதல் பக்கம்

1.ஒரு புதிய ஆரம்பம்

2.வெளியே காலடி எடுத்து வைத்தல்

3.உன்னதத்தின் பெலன்

4.மூழ்குதலை நிறைவேற்றுங்கள்

5.தேவனிடமிருந்து ஒரு தொடுதல்

6.முன்னோக்கிப் பார்த்தல்

7.புதிய வாழ்க்கையின் தன்மைகள்

8.எல்லோரும் ஒன்றாயிருத்தல்

அடுத்த பக்கம்

எல்லோரும் ஒன்றாக வாழுதல்

சபையிலுள்ள மற்றவர்களோடு இணைந்து ஜீவித்தல்

நீங்கள் கிறிஸ்தவராகும்போது, சபை என்னும் ஒரு புது சமுதாயத்தில் அங்கமாவது தேவனுடைய நோக்கமா யிருக்கிறது.

மற்றவர்களுடன் கூடி வாழும்போதுதான் நீங்கள் கிறிஸ்தவ விசுவாசத்தை வாழ்ந்து காட்ட முடியும். நீங்கள் காண்கிறபடி, உங்கள் விசுவாசம் தனிப்பட்டதாயிருந்தாலும் ஒருபோதும் அது தனித்துச் செயல்பட முடியாது.

புதிய ஏற்பாட்டிலுள்ள பல போதனைகள் தனிமனிதனுக்கு மட்டுமல்ல, அவை ஒரு சமுதாயமான சபைக்குரியவையாகும்.

"ஒருவருக்கொருவர்', "ஒருவரிலொருவர் அன்புகூருங்கள்,' "ஒருவருக்கொருவர் ஊழியஞ்செய்யுங்கள்' போன்ற கட்டளைகள், புதிய ஏற்பாட்டில் பல இடங்களில் காணப்படுகின்றன.

இந்த பகுதியில், நீங்கள் சபையாகிய சமுதாயத்தில் பிறருடன் இணைந்து உங்கள் கிறிஸ்தவ விசுவாசத்தை வாழ்ந்து காட்டுவது என்றால் என்ன என்பதைக் காணலாம்.

அப். 2:42-47 லிலும், மற்ற வசனங்களிலும் விசுவாசிகள் இணைந்திருந்து கீழ்க்கண்டவைகளில் முழுமனதுடன் ஈடுபட்டதை நாம் காண்கிறோம்.

        ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக்கொள்ளுதல்

        ஒருவரோடொருவர் நட்புக் கொள்ளுதல்

        ஒருவரோடொருவர் அப்பம் பிட்குதல்

        ஒருவரோடொருவர் ஜெபித்தல்

       ஒருவருக்கொருவர் கொடுத்தல்

      ஒருவரோடொருவர் சேர்ந்து நற்செய்தி அறிவித்தல்

       ஒருவரோடொருவர் சேர்ந்து ஆராதித்தல்

ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக் கொள்ளுதல்

பெந்தேகோஸ்தே நாளில் எருசலேமிலுள்ள சபையுடன் 3000 புது விசுவாசிகள் சேர்க்கப்பட்டனர் என்று அப்போஸ்தலர் நடபடிகளை எழுதிய லூக்கா நமக்குக் கூறுகிறார்.

புதிய விசுவாசிகள் தரத்திலும் எண்ணிக்கையிலும் வளர்ந்ததற்கான காரணங்களில் போதனை ஊழியமும் ஒன்றாகும். ""அப்போஸ்தலருடைய உபதேசத்திலும்... உறுதியாய்த் தரித்திருந்தார்கள்'' அப்போஸ்தலர் 2:42.

நமது ஆவிக்குரிய வளர்ச்சியில் தேவனுடைய வார்த்தை பல அற்புதங்களை நடப்பிக்கின்றது. அப்போஸ்தலனாகிய பவுல், இதை மெலித்தாத் தீவின் சபைத் தலைவர்களிடமிருந்து பிரிகின்ற சமயத்தில் சுட்டிக் காட்டுகிறார்:

""தேவனுடைய ஆலோசனையில் ஒன்றையும் நான் மறைத்து வைக்காமல், எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்த படியினாலே,... நீங்கள் பக்திவிருத்தியடையவும், பரிசுத்தமாக் கப்பட்ட அனைவருக்குள்ளும் உங்களுக்குச் சுதந்திரத்தைக் கொடுக்கவும் வல்லவராயிருக்கிற தேவனுக்கும் அவருடைய கிருபையுள்ள வசனத்துக்கும் உங்களை ஒப்புக் கொடுக்கிறேன்.'' அப்போஸ்தலர் 20:26,32

அப்போஸ்தலர் நடபடிகளை எழுதிய லூக்கா, சபையின் வளர்ச்சியை தேவ வார்த்தையின் வளர்ச்சியாக வருணிக்கிறார்: ""தேவவசனம் விருத்தியடைந்தது; சீஷர்களுடைய தொகை எருசலேமில் மிகவும் பெருகிற்று'' அப். 6:7; ""தேவவசனம் வளர்ந்து பெருகிற்று'' அப். 12:24.

""கர்த்தருடைய வசனம் அத்தேசமெங்கும் பிரசித்தமாயிற்று'' அப். 13:49 என்று லூக்கா அந்தியோகியாவில் பவுலும், பர்னபாவும் செய்த பிரசங்கத்தைப்பற்றிக் கூறுகிறார்.

தேவவார்த்தையின் போதனையே சபை வளர்ச்சிக்கு முதலாவதானதும் மிகவும் முக்கியமானதுமாகும். ஞாயிற்றுக் கிழமைகளிலும், வாரத்தின் மற்ற நாட்களிலும் நடக்கும் பொதுக்கூட்டங்களிலும், வீட்டுக்கூட்டங்களிலும், வேதபாட வகுப்புகளிலும், கொடுக்கப்படும் போதனைகளை வாழ்வில் ஏற்றுக்கொள்ளுங்கள். கூட்டங்களுக்குச் செல்லும்போது, எப்பொழுதும் உங்கள் வேதாகமத்தை எடுத்துச் செல்லுங்கள். ஒரு குறிப்பேட்டில் பிரசங்கத்தின் முக்கிய குறிப்புகளையும், ஆவியானவர் உங்களுடன் தனிப்பட்ட முறையில் பேசுவதையும் எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.

தேவ வார்த்தையைப் பரப்புவதில் நம் ஒவ்வொருவருக்கும் பங்குண்டு. ""கிறிஸ்துவின் வசனம் உங்களுக்குள்ளே சகல ஞானத்தோடும் பரிபூரணமாக வாசமாயிருப்பதாக... ஒருவருக் கொருவர் போதித்து புத்திசொல்லிக்கொண்டிருங்கள்'' கொலோசெயர் 3:16.

நாம் ஒருவரையொருவர் உற்சாகப்படுத்துவதற்கும், ஒருவருக் கொருவர் ஆலோசனை கூறுவதற்கும் வேதத்தை வாசிக்க வேண்டும். தேவ வார்த்தையை வைத்து சபையை வளர்க்கும் படி ஒரு இளம் சபைத் தலைவனை அப்போஸ்தலனாகிய பவுல் உற்சாகப்படுத்துகிறார்: ""நான் வருமளவும் வாசிக்கிறதிலும் புத்திசொல்லுகிறதிலும் உபதேசிக்கிறதிலும் ஜாக்கிரதையாயிரு.'' 1 தீமோத்தேயு 4:13.

ஒருவரோடொருவர் நட்புகொள்ளுதல்

எருசலேமிலுள்ள சபையின் பல புது விசுவாசிகளைப்பற்றிக் கூறும்போது, ""அவர்கள் அந்நியோந்நியத்தில் உறுதியாய் தரித்திருந்தார்கள்'' (அப். 2:42) என்று லூக்கா கூறுகிறார். இது கிரேக்க மொழியில் ""கொய்னோனியா'' என்று கூறப்படுகிறது. இதை, பொதுவாக வைத்து அனுபவித்தல், சமுதாய வாழ்வு, மேலும் கற்றுக்கொள்ளுதல் என்றும் மொழி பெயர்க்கலாம்.

இந்த ஐக்கியத்திற்கு உதாரணமாக ஒரு சம்பவம் நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ""அவர்கள் வீடுகள்தோறும் அப்பம்பிட்டு மகிழ்ச்சியோடும் கபடமில்லாத இருதயத்தோடும் போஜனம்பண்ணினார்கள்.'' அப்.2:46.

உரையாடல், விருந்தோம்பல், ஊழியம் மற்றும் விடுமுறைகால நிகழ்ச்சிகள், சபைக்கூட்டங்கள் மற்றும் நற்செய்திப்பணி இவற்றில் ஒன்றாக இணைந்து செயல்படுவதன்மூலம் பரிசுத்த ஆவியானவர் நமது இருதயங்களை அன்பிலும் ஒருமனப்பாட்டிலும் ஒருங்கிணைக்கிறார்.

கிறிஸ்தவ ஐக்கியம் ஒருவரையொருவர் உற்சாகப்படுத்தவும் பலப்படுத்தவும் பயன்படும் ஒரு அரிய சாதனமாகும். ""அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனித்து; சபைகூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக் கொருவர் புத்திசொல்லக்கடவோம்; நாளானது சமீபித்து வருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்திசொல்ல வேண்டும்.'' என்ற எபிரெயர் நிருப ஆக்கியோனின் நினைப்பூட்டுதல் நம்மில் சிலருக்குத் தேவையாயிருக்கிறது. விசுவாசிகளின் ஐக்கியத்தில் ஒருவருக்கொருவர் உள்ள அன்பும் நட்பும் வளரும். மேலும், ""ஒருவரிலொருவர் அன்புகூர வேண்டும்'' என்ற இயேசுவின் கட்டளையும் நிறைவேறும்.''

ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து, இப்படியே கிறிஸ்துவினுடைய பிரமாணத்தை நிறைவேற்றும்படியாக நாம் கற்பிக்கப்படுகிறோம். கலாத்தியர் 6:2. இதைச் செய்வதற்கு நாம் மற்றவர்களைச் சந்திக்க வேண்டும், ஐக்கியத்தை வளர்ப்பதற்கு சபையில் ஏற்பாடு செய்யப்படவேண்டும்.

சபையின் நிகழ்ச்சிகளில் பங்குபெறுங்கள். மற்றவர்களுடன் பொதுவாக உங்களுக்கு இருக்கும் காரியத்தைப் புரிந்துகொண்டு ஒருவருக்கொருவர் எவ்வாறு ஊழியம் செய்யலாம் என்பதைக் கண்டுபிடியுங்கள்.

ஒருவரோடொருவர் அப்பம்பிட்குதல்

கர்த்தரின் பந்தியை அனுசரிப்பதில், ஆதிக் கிறிஸ்தவர்களின் மாதிரியைப் பின்பற்றும்படி நாம் அழைக்கப்படுகிறோம். சபையில் நாம் அப்பம் பிட்கிறோம், திராட்சைரசம் குடிக் கிறோம். ஏனெனில் இயேசு அவருடைய சீடர்களிடம் இதைச் செய்யும்படி சொன்னார். லூக்கா 22:14-20;                               1 கொரிந்தியர் 11:23-26.

கர்த்தரின் பந்தி என்பது, அவருடைய பிரசன்னத்தில், அவருடைய மேஜையில் அவரோடு ஐக்கியப்படுவதாகும். இது, பரிசுத்த ஆவியானவர் முழுச்சபைக்கும் ஆசீர்வாதத்தைக் கொண்டுவர பயன்படுத்தும் ஒரு சாதனமாகும்.

இது கிறிஸ்துவுக்குள்ளாக புதிதாக வந்த தேவ மக்களின் உணவாகும். அனைவரும் சேர்ந்து இந்த உணவைப் பகிர்ந்துகொள்வதில் ஏதோ மந்திர சக்தி இருக்கிறது அல்லது ஏதோ பலன் தானாக வருகிறது என்று எண்ண வேண்டாம்.

ஒருவர் இரட்சிப்பிற்காக, கிறிஸ்துவில் தன் நம்பிக்கையைப் புதுப்பித்துக் கொண்டும், பலப்படுத்தியும், மேலும் பரிசுத்த ஆவியானவர் ஆவிக்குரிய ஆசீர்வாதத்தைக் கொண்டுவருவார் என நம்பி விசுவாசத்தோடு பங்கு கொள்ளும்போது, நிச்சயமாகவே கூடுதல் ஆசீர்வாதத்தை எதிர்பார்க்கலாம்.

கர்த்தரின் பந்தி, அடையாளமாக மட்டுமன்றி, கிருபையின் ஒரு சாதனமாகவும் இருக்கிறது. ""நாம் ஆசீர்வதிக்கிற ஆசீர்வாதத்தின் பாத்திரம் கிறிஸ்துவினுடைய இரத்தத்தின் ஐக்கியமாயிருக்கிறதல்லவா? நாம் பிட்கிற அப்பம் கிறிஸ்துவினுடைய சரீரத்தின் ஐக்கியமாயிருக்கிறதல்லவா?''     1 கொரிந்தியர் 10:16.

நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் கிறிஸ்துவின் சரீரம், இரத்தம் இவற்றின் பலன்களில் பங்குபெறுவது நம்மை ஒருவரோடொருவர் இணையச் செய்கிறது: ""அந்த ஒரே அப்பத்தில் நாமெல்லோரும் பங்குபெறுகிறபடியால், அநேகரான நாம் ஒரே அப்பமும் ஒரே சரீரமாயிருக்கிறோம்.'' 1 கொரிந்தியர் 10:17.

கர்த்தருடைய பந்தியில், விசுவாசிகளிடையேயும், கர்த்தருட னும் ஆவிக்குரிய ஒருமைப்பாடு ஆழ்ந்து பலப்படுத்தப் படுகிறது. நாம் கீழ்ப்படிதலுடனும் விசுவாசத்துடனும் பங்குபெறும்போது நமது ஆத்துமா போஷிக்கப்படும்.

இந்த எளிய செயலில் நாம் ஐந்து காரியங்களைச் செய்கிறோம்.

நாம் பின்னிட்டுப் பார்க்கிறோம்

இயேசு நம் ஒவ்வொருவருக்காகவும் மரித்தாரென்றும் மறுபடியும் உயிரோடெழுந்தார் என்றும் நன்றியுடன் நினைவு கூருகிறோம்.

நாம் உள்நோக்கிப் பார்க்கிறோம்

நம்மை நாமே ஆராய்ந்து, நமக்குள்ளாகப் பார்ப்பதின்மூலம் நம்மேல் நியாயத்தீர்ப்பு வராதபடி தடுக்கிறோம். விசுவாசத்தினாலே, ஜீவஅப்பமாகிய இயேசுவை நாம் புசிக்கிறோம். இதன்மூலம் நமக்கு ஜீவன் கொடுக்கப்பட்டு, புதுப்பிக்கப்படுகிறது. நமது மனச்சாட்சி கழுவப்படுகிறது, சரீர சுகமும் பெறுகிறோம்.

நாம் மேல்நோக்கிப் பார்க்கிறோம்

உயிர்த்தெழுந்து பரத்துக்குச் சென்ற கர்த்தரிடம் நமது வாழ்வை மறுபடியும் அர்ப்பணிக்கிறோம்.

நாம் சுற்றிலும் பார்க்கிறோம்

கர்த்தருடனும், நமது சகோதர சகோதரிகளுடனும் பண்ணின உடன்படிக்கையையும் நாம் புதுப்பிக்கிறோம். நாம் ஒருவருக்கொருவர் நெருங்கி வருகிறோம்.

நாம் முன்னோக்கிப் பார்க்கிறோம்

""கிறிஸ்து வரும்வரையிலும்'' அவருடைய வெற்றியைப் பறைசாற்றுகிறோம். ஆட்டுக்குட்டியானவரின் கலியாண விருந்தில் இடம்பெறக் காத்திருக்கிறோம்.

அப்பத்தைப் பிட்டு, திராட்சரசத்தைக் குடிப்பது என்பது கர்த்தராகிய இயேசுவிடம் நெருங்கிச் செல்வதற்கு தேவன் அளித்த ஒரு வழியாகும்; மேலும் தேவனுடைய குடும்பத்தில் அவர் நமக்கு அளித்துள்ள மற்றக் கிறிஸ்தவர்களிடமும் நெருங்கிச் செல்வதற்கு அது ஒரு வழியாகிறது.

நீங்கள் செய்ய வேண்டிய ஒரே ஆயத்தம், உங்களை நீங்களே ஆராய்ந்து பார்ப்பதேயாகும்.  1 கொரி. 11:28-32.

தற்பரிசோதனை

நீங்கள் கர்த்தராகிய இயேசுவோடு சரியான உறவுடனிருந்து  அவர் உங்களிடம் சொல்லுகிற எல்லாவற்றையும் செய்கிறீர்களா? மற்ற எல்லாரையும் சபையில் கிறிஸ்துவின் சரீரமாகிய அது உள்ளபடியே ""ஏற்றுக்கொள்ளுகிறீர்களா'' அல்லது ""பகுத்தாய்கிறீர்களா?'' சபையில் உள்ள மற்றவர்கள் மேல் நீங்கள் கொண்டுள்ள மனோபாவத்தை பகுத்தாராய்வது மிக முக்கியம். நீங்கள் அவர்கள் நலனில் அக்கறை கொண்டிருக்கிறீர்களா? உங்களுக்கு விரோதமாகப் பாவம் செய்தவர்களை மன்னிக்கிறீர்களா? ""நம்மை நாமே நிதானித்து அறிந்தால் நாம் நியாயந்தீர்க்கப்படோம்.'' 1 கொரி. 11:31 என்று நமக்கு வாக்குத்தத்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இக்காரியத்தைக் குறித்து நீங்கள் நிச்சயமில்லாத வராயிருந்தால், திருவிருந்தில் பங்குபெறக்கூடாது. இல்லையெனில், நீங்கள் குணமடைந்து மேலும் பலப்படுவதற்குப் பதில், பெலவீனப் பட்டு, வியாதிப்படலாம். தேவப்பிரசன்னத்தை நீங்கள் அலட்சியப்படுத்தி, புசித்துக் குடித்தாலோ அல்லது சபையாகிய குடும்பத்தில் ஒருவருடன் தவறாக நடந்துகொண்டாலோ, அல்லது தவறான உறவில் இருந்தாலோ, தேவன் உங்களை சிட்சிப்பார்.

எனினும், உங்களை நீங்களே ஆராய்ந்து பார்த்தபின் உங்கள் மனச்சாட்சி தெளிவாயிருந்தால் திருவிருந்தில் மகிழ்ச்சியுடனும் எதிர்பார்ப்புடனும் பங்குபெறுங்கள். ""ஒருவன் என் சத்தத்தைக் கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம் பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம் பண்ணுவான்'' வெளிப்படுத்தல் 3:20.

ஒருவரோடொருவர் சேர்ந்து ஜெபித்தல்

தேவஇராஜ்ஜியம் அமைய கூட்டு ஜெபம் அற்புதங்களைச் செய்வதால், ஆதிக் கிறிஸ்தவர்கள் "ஜெபத்தில் தரித்திருந் தார்கள்' என்பதில் ஆச்சரியமில்லை.

ஆதிசபையின் மாதிரியைப் பின்பற்றி, நாம் ஒன்றாகக் கூடியும், தனிநபராகவும் ஜெபிக்க வேண்டும். யூதத் தலைவர் களின் பயமுறுத்தலைப்பற்றி விசுவாசிகள் கேள்விப் பட்டபோது, ""அவர்கள் ஒருமனப்பட்டு தேவனை நோக்கி சத்தமிட்டனர்...'' அப். 4:24. இந்தக் கூட்டு ஜெபத்திற்கு தேவன் பதிலளித்தார். ""அவர்கள் ஜெபம்பண்ணினபோது, அவர்கள் கூடியிருந்த இடம் அசைந்தது. அவர்களெல் லோரும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு, தேவ வசனத்தைத் தைரியமாய்ச் சொன்னார்கள்''. அப் 4:31.

சிறைக்கதவுகளைத் திறத்தல்

கூட்டு ஜெபத்தின் வல்லமைக்கு மற்றுமொரு உதாரணம் பேதுரு கைதுசெய்யப்பட்டு, சிறையிலடைக்கப்பட்ட சம்பவத்திலிருந்து கிடைக்கிறது. ""... பேதுரு சிறைச் சாலையிலே காக்கப்பட்டிருக்கையில் சபையார் அவனுக்காக தேவனை நோக்கி ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார்கள்''. அப்போஸ்தலர் 12:5.

சபையின் ஜெபத்திற்குப் பதிலளிக்க, தேவன் ஒரு தூதனை அனுப்பி, பேதுருவின் கட்டுகளை அவிழ்த்து, சிறைக் கதவுகளைத் திறந்து, பேதுருவை விடுவித்தார்.

ஒரு குறிப்பிட்ட காரியத்திற்காக ஜெபிக்கும்படியாக நாம் கூடி வரும்போதும், ஜெப சங்கிலியின் மூலம் விண்ணப்பம்  கொடுக்கப்படும்போதும், ஒவ்வொரு நாளுக்குரிய தலைப்பு களோடு கூடிய ஜெப அட்டவணையை தலைவர்கள் கொடுக்கும்போதும் நாம் கூட்டு ஜெபத்தில் பங்கு பெறுகிறோம்.

தனியாக ஜெபிப்பதைக் காட்டிலும், இரண்டு மூன்று பேராகச் சேர்ந்து ஜெபிப்பதில் அதிக பலனுண்டு. அதிலும், முழுச் சபையாகக் கூடி ஜெபிப்பதில் இன்னும் அதிக பலனுண்டு.

ஒரு எழுத்தாளர் கூறுவதுபோல், ""ஒரு சபையின் மெய்யான ஐக்கியம் வளர வளர, சபைக்குள் ஒருவருக்காக ஒருவர் தொடர்ந்து ஜெபிப்பது பெருக வேண்டும், அப்பொழுது சபையின் மூலமாக பரிசுத்த ஆவியானவரின் மெய்யான ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள் பெருகியோடுமென்றும் நாம் எதிர்பார்க்கலாம்''.

ஒருவருக்கொருவர் கொடுத்தல்

இங்கு நீங்கள் நன்கு கவனிக்க வேண்டிய, பணத்தைக் குறித்ததான சில நடைமுறைக் காரியங்கள் உள்ளன. சபை தன்னிறைவு பெற்றதாக மாறவும், முழு நேர ஊழியர்களுக்குச் சம்பளம் தரவும், ஏழைகளுக்குக் கூடுமானவரை அதிகமான அளவு உதவிசெய்யவும், மற்ற இடங்களில் உள்ள தேவ பணியைப் பணத்தால் தாங்கவும் சபை உறுப்பினர் மூலமாகப் பணம் கிடைக்கும்படி நாம் தேவனையே சார்ந்திருக்கிறோம்.

கொடுத்தல் என்பது நமது அர்ப்பணிப்பின் ஒரு அளவாகும். ஒழுங்காகத் திட்டமிட்டு தாராளமாகக் கொடுப்பது, சபைக்கும் கர்த்தராகிய இயேசுவுக்கும் உள்ள உங்கள் அர்ப்பணத்தில் நீங்கள் முழு மனதோடு இருக்கிறீர்கள் என்பதைக் காட்டுகிறது.

தசமபாகம்: கொடுப்பதற்கு ஒரு வழிகாட்டி

கர்த்தருடைய பணிக்காக நம் கொடுப்பதற்குப் பழைய ஏற்பாட்டின் தசமபாக ஒழுங்கு ஒரு நல்ல துவக்கமென்று நாங்கள் நம்புகிறோம்.

 

முதற்படிகள்

ஒரு வழிகாட்டியில்லாதபடி, நீங்கள் கொடுப்பதை எங்கு தொடங்குவீர்கள்? பழைய ஏற்பாடு முழுவதுமாக, கொடுக்கும்படி மக்களை தேவன் எங்கு ஏவினாரோ அங்கு நீங்களும் ஏன் தொடங்கக்கூடாது? தசமபாகத்துடன் ஏன்                                         ஆரம்பிக்கக் கூடாது?

கொடுப்பதில் தீரச்செயல்

ராண்டி அல்கார்ன் என்னும் ஓர் கிறிஸ்தவ எழுத்தாளர், ""பணம், பொருள், நித்தியம்'' என்னும் தனது நூலில் இந்த சவாலை முன்வைக்கிறார். ""தசம பாகத்துடன் துவங்குங்கள். நீங்கள் தீவிரமாயிருக்கிறீர்களென உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும், கர்த்தருக்கும் இதன்மூலம் காட்டுகிறீர்கள். நீங்கள் தொடர்ந்து தசமபாகம் கொடுக்கும்பொழுது, அதைத் தேவன் ஏற்றுக்கொள்ளுகிறார் என்பதை உணருவீர்கள். உங்கள் பணம், பொருள் அதைத்தொடர்ந்து, உங்கள் முழு வாழ்க்கையின்மீதும் தேவனுடைய ஆளுகையை ஏற்றுக் கொள்வதில் உள்ள விடுதலையையும் மகிழ்ச்சியையும் பெறுவீர்கள்.

 

இப்பொழுதே துவங்குங்கள்

இந்த எழுத்தாளர் தசமபாகத் தீர்மானத்தை இப்பொழுதே எடுக்க நம்மை உற்சாகப்படுத்துகிறார்.

""தசமபாகம் கொடுப்பது சரியென நான் காண்கிறேன். ஆனால் அதை இப்பொழுதே துவக்க இயலாது'' என சிலக் கிறிஸ்தவர்கள் கூறுகிறார்கள்.

கீழ்ப்படிவதற்கு ஒருபோதும் காலம் தாழ்த்தாதீர்கள். உணர்த்தப்பட்டு, தெளிவுறும் நேரமே செயல்படத் தகுந்த நேரமாகும். கொடுக்கிறதான இந்த தீரச் செயலைத் துவங்க தேவனை நம்புங்கள்.

தீர்க்கதரிசியின் வாக்குத்தத்தம்

மல்கியா தீர்க்கதரிசி தசமபாகம் கொடுப்பதைப்பற்றி இவ்வாறு கூறுகிறார்:

  தசமபாகம் தேவனுக்கு சொந்தமானது. எனவே நாம் அதை வைத்துக்கொள்வது நாம் அவருக்குக் கொடுக்க வேண்டியதிலிருந்து திருடுவதாகும். தசமபாகத்தைச் செலுத்தும்போது, தேவன் நம்மைப் பொருளாதார ரீதியிலும் ஆவிக்குரிய விதத்திலும் ஆசீர்வதிக்கிறார்.

  நமது மொத்த வருமானத்தின் தசமபாகத்தைக் கொடுக்க முடியாது என நாம் தீர்மானிக்கும்போது, அக்காரியத்தில் தேவனைப் பரீட்சித்துப் பார்க்கும்படி நாம் அழைக் கப்படுகிறோம். தைரியமாகக் கொடுங்கள்.

 அவருடைய வாக்குத்தத்தத்தை நம்புங்கள், அதன்பின் நிமிர்ந்து உட்கார்ந்து, அவர் தமது வார்த்தையை நம் அன்றாட வாழ்வில் எவ்வாறு காக்கிறார் என்று பாருங்கள்: மல்கியா 3:7-12.

 

""ஒரு வேளை, பண விஷயங்களில் அதைக் கொடுக்க நமக்கு ஊக்கமும் உற்சாகமும் தேவைப்படுவதால் முழு வேதத்திலும் இந்த ஒரு இடத்தில் மட்டுமே தேவனை பரீட்சித்துப் பார்க்கும்படி நாம் அழைக்கப்படுகிறோம்'' என்று ஒரு எழுத்தாளர் கூறுகிறார்.

இயேசு மற்றும் அவர் சீஷர்களின் மாதிரி

இயேசு தசமபாகம் செலுத்தினார். அவர் ஒரு பக்தியுள்ள யூத குடும்பத்தில் வளர்க்கப்பட்டு, காணிக்கை செலுத்துவது சம்பந்தமான, பழைய ஏற்பாட்டுப் போதனையைப் பின்பற்றும்படி போதிக்கப்பட்டார். ஒரு சமயத்தில், பரிசேயர்கள் தசமபாகம் செலுத்தும் வழக்கத்தை அவர் பாராட்டினார்: ""நீங்கள் ஒற்தலாம், மருக்கொழுந்து முதலிய சகலவித பூண்டுகளிலும் தசமபாகம் கொடுத்து, நியாயத்தையும் தேவஅன்பையும் விட்டுவிடுகிறீர்கள்; இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விடாதிருக்க வேண்டுமே'' என்றார். லூக்கா 11:42.

உண்மையாகத் தசமபாகம் செலுத்திய பரிசேயர்களைக் காட்டிலும், அதிகமாக அவர் சீஷர்கள் செய்யவேண்டு மென்று இயேசு வலியுறுத்தினார்.

 ""வேதபாரகர், பரிசேயர் என்பவர்களுடைய நீதியிலும் உங்கள் நீதி அதிகமாயிராவிட்டால், பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிக்கமாட்டீர்களென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்''. மத்தேயு 5:20. தசமபாகம் செலுத்துவதில் முதற்படி எடுத்து வைக்கவும், ""கொடுக்கும் கிருபையில் பெருகவும்'' (2 கொரி. 8:7) நமக்கு உதவி செய்ய பரிசுத்த ஆவியானவர் இருக்கிறார்.

ஆதிக் கிறிஸ்தவர்களின் மாதிரி

ஆதிச்சபையில் தசமபாகம் செலுத்துவது வழக்கமாயிருந்தது. ""அதில் பெரும்பான்மையோராயிருந்த யூதக்கிறிஸ்தவர்கள், உள்ளூர் சபைக்குத் தங்கள் தசமபாகத்தைக் கொடுத்தார்கள் என்று அனுமானிப்பது தவறாகாது.

அப்போஸ்தலர் நடபடிகளின் துவக்க அத்தியாயங்களை நாம் பார்க்கும்போது, உண்மையில் அவர்கள் தசமபாகத் திற்கும் அதிகமாகக் கொடுத்தார்கள் என்று தெரிகிறது.

தசமபாகம் கர்த்தருக்குக் கொடுப்பதில் குறைந்தபட்ச அளவு என்ற நம்பிக்கையிலிருந்து ஆதிச்சபை பின்வாங்கியதாக ஒரு அடையாளமும் இல்லை,'' என்று ஒரு எழுத்தாளர் கூறுகிறார்.

இன்று தசமபாகம்

ஒரு கிறிஸ்தவன் இன்று தசமபாகம் செலுத்தக் கடமைப் பட்டிருக்கிறான் என்று நாம் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் கூட, தசமபாகம் செலுத்துவது என்பது ஒரு நல்ல கருத்தே ஆகும். தசமபாகம் செலுத்தும்போது, நமது சபையில் தேவனுடைய ஊழியத்திற்கு நமது அர்ப்பணிப்பு உணர்வு அதிகரிக்கிறது.

சபைக்கு ஒழுங்காக நாம் கொடுக்கும் தசமபாகம் மற்றும் காணிக்கைகள் நமது வருமானத்தின் ஒரு பகுதியாக இருப்பது ஒரு துவக்க நிலையாக இருக்கட்டும். உங்கள் பணப்பையை மறுபிறப்படையச் செய்யுங்கள் மோட்சம், மரணம் என்பவைகளைக் காட்டிலும், பணம், பொருட்கள் பற்றி  இயேசு அதிகமாகப் பேசியுள்ளார். எழுதி வைக்கப்பட்டுள்ள இயேசுவின் வார்த்தைகளில் 15 சதவீதம் பணம், பொருள் பற்றியவையாகும். நம் ஒவ்வொருவருக்கும் இருதயமும் மனமும் மாற்றமடைய வேண்டுவதுமன்றி, நமது பணப்பையும் மனமாற்றமடைய வேண்டுமென்று மார்ட்டின் லூத்தர் கூறியது சரியே எனத் தோன்றுகிறது.

தசம பாகத்தைப் பயன்படுத்துதல்

பழைய ஏற்பாட்டின்படி, லேவியர்கள் தசமபாகத்தின் மூலம் தாங்கப்பட்டனர். இவர்கள் முழுநேரப் போதக ஊழியத்திலும் தேவனை ஆராதிப்பதிலும் தங்கள் முழு நேரத்தையும் செலவிட்ட இவர்கள் காணியாட்சி இல்லாமல் வேலை செய்யும்படியாக அழைக்கப்பட்ட கோத்திரத்தார்.

இன்று சபையில், தசமபாகத்தின் ஒருபகுதி உள்ளூர் சபையிலும் அதற்குப் புறம்பேயுள்ள பகுதியிலும் முழு நேர ஊழியங்களைத் தாங்க செலவிடப்படுகிறது.

அப்போஸ்தலனாகிய பவுல் இந்தக் காரியத்தில் மிகவும் வெளிப்படையாகவும் நேரிடையாகவும் போதித்தார். ""நன்றாய் விசாரணை செய்கிற மூப்பர்களை, விசேஷமாகத் திருவசனத்திலும் உபதேசத்திலும் பிரயாசப்படுகிறவர்களை, இரட்டிப்பான கனத்திற்குப் பாத்திரராக எண்ணவேண்டும்... வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான்''          1 தீமோத்தேயு 5:17,18.

""எவன் தன் சொந்தப் பணத்தை செலவழித்து, தண்டிலே சேவகம் பண்ணுவான்?... அந்தப்படியே சுவிசேஷத்தை அறிவிக்கிறவர்களுக்கு சுவிசேஷத்தினாலே பிழைப்பு உண்டாக வேண்டுமென்று கர்த்தரும் கட்டளை யிட்டிருக்கிறார்'' 1 கொரிந்தியர் 9:7-14.

""உற்சாகக் காணிக்கை அல்லது அன்பின் பரிசு, பணம் ஒருபோதும் என்னிடம் தங்கியதில்லை. அப்படி இருந்திருந் தால் அது என்னை எரித்திருக்கும். என் இருதயத்திற்குள் செல்ல அது வழியைக் கண்டுபிடிப்பதற்குள், கூடிய விரைவில் அதைக் கொடுத்துவிடுவேன்'' என்று ஜாண் வெஸ்லி கூறினார்.

எருசலேம் சபையிலிருந்த விசுவாசிகளின் மனப்பான்மையும் அவ்வாறே இருந்தது. தங்களிடமிருந்த எல்லாவற்றையும் அவர்கள் பகிர்ந்தளித்தார்கள். தேவையுள்ள மற்றவர்களுக்கு, அதாவது சபையிலுள்ள ஏழைகளுக்குக் கொடுக்கத் தங்கள் உடைமைகளை விற்றார்கள். ""விசுவாசிகளெல்லாரும் ஒருமித் திருந்து, சகலத்தையும் பொதுவாய் வைத்து அநுபவித் தார்கள். காணியாட்சிகளையும் ஆஸ்திகளையும் விற்று, ஒவ் வொருவனுக்கும் தேவையானதுக்குத்தக்கதாக அவைகளில் எல்லோருக்கும் பகிர்ந்துகொடுத்தார்கள்''. அப். 2:44,45.

""சீப்புரு தீவைச் சேர்ந்த லேவியனும் அப்போஸ்தலராலே ஆறுதலின் மகனென்று அர்த்தங்கொள்ளும் பர்னபா என்னும் மறுபெயர் பெற்றவனுமாகிய யோசே என்பவன், தனக்கு உண்டாயிருந்த நிலத்தை விற்று, அதின் கிரயத்தைக் கொண்டுவந்து, அப்போஸ்தலருடைய பாதத்திலே வைத்தான்''. அப். 4:36-37.

ஒரு சமுதாயமாக வாழும் வழக்கம் இன்று நமக்கு ஒரு முன்மாதிரியாக இல்லை. இது ஒரு குறிப்பிட்ட வரலாற்று சூழ்நிலைக்குச் சபையின் பதில் விளைவு ஆகும். பல்லாயிரக் கணக்கான புதிய விசுவாசிகள் தங்கள் வீட்டிற்குத் திரும்பாமல் எருசலேமில் தங்கியிருக்க விரும்பினர். மற்றவர்கள், தங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் ஒதுக்கி வைத்ததாலும் உபத்திரவத்தினாலும் தங்கள் வீடுகளுக்குத் திரும்பிச் செல்ல முடியவில்லை.

ஒரு மாதிரி சபை

பகிர்ந்து கொள்ளும் விருப்பம், மேலும் அன்பின் பரிசைக் கொடுக்கும் உதாரத்துவம் ஆகிய காரியங்கள் பணம் மற்றும் உடைமையைக் குறித்து, ஆதி விசுவாசிகளின் மனப்பான்மை, எல்லாக் காலத்திற்கும், எல்லா இடத்திற்கும் மாதிரியாக இருக்கிறது:  ""அவர்களில் ஒருவனுக்கும் ஒன்றும் குறைவா யிருந்ததில்லலை'' அப். 4:35 என்பது ஒவ்வொரு சபைக்கும் உரிய தரிசனமக இருக்கவேண்டும். ""சகலமும் அவர்களுக்குப் பொதுவாயிருந்தது'' அப். 4:32 என்பது நாம் வாஞ்சிக்கும் மனப்பான்மையாக இருக்கட்டும். சபையிலுள்ள மற்ற விசுவாசிகளுக்குக் கடனாகவோ அல்லது இலவசமாகவோ கொடுக்கும்படியாக நம்மெல்லாருக்கும் சில உடைமைகள் உண்டு.

உற்சாகக் காணிக்கை அல்லது அன்பின் காணிக்கை உங்களுடைய, கிரமமான, வாக்குப்பண்ணின காணிக் கையைத் தவிர, தேவனுடைய இராஜ்ஜியப் பணிகளுக்காக இன்னும் காணிக்கைகளைக் கொடுக்க வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இவ்வகைக் காணிக்கைகள் கட்டுமானப் பணிகளுக்கும், உள்ளூர் சபையின் சொந்தத் தேவைகளுக் கும் (உதாரணமாக அனாதைகளுக்கும், விதவைகளுக்கும்) பயன்படுத்தப்படுத்தப்படும். மேலும் இது உலகளாவிய, கிறிஸ்துவின் சரீரத்தின் தேவைகளாகிய, ஏழைகளுக்கு உணவு, உடை, வேதாகமங்கள், கிறிஸ்தவ இக்கியங்கள் விநியோகம், கிறிஸ்தவ வானொலி நிகழ்ச்சிப் பணி, மருத்துவ மனைகள், பள்ளிகள் முதலியவற்றிற்கு பயன்படுத்தப்படும்.

முடிவாக

தசம பாகத்தையும் அன்புக் காணிக்கைகளையும் கொடுப்பதை ஒரு கடமையாகக் கருதாமல், மகிழ்ச்சியாக எடுத்துக்கொள்ள வேண்டும். மக்கதோனிய சபை விசுவாசிகள் நமக்கு முன்மாதிரியாக இருக்கட்டும். ""அவர்கள் தங்கள் திராணிக்குத் தக்கதாகவும் தங்கள் திராணிக்கு மிஞ்சியும் கொடுக்க, தாங்களே மனதுள்ளவர்களாக இருந்தார்களென்பதற்கு நான் சாட்சியாயிருக்கிறேன். தங்கள் உபகாரத்தையும், பரிசுத்தவான்களுக்குச் செய்யப்படும் தர்ம ஊழியத்தின் பங்கையும் நாங்கள் ஏற்றுக்கொள்ளும்படி அவர்கள் எங்களை மிகவும் வேண்டிக்கொண்டார்கள்''.       2 கொரி 8:3-4 என அப்போஸ்தலர் பவுல் கூறுகிறார்.

ஒருவரோடொருவர் இணைந்து நற்செய்தி அறிவித்தல்

ஆதிச்சபையில் ஆராதனை, நற்செய்திப்பணி இரண்டும் முக்கியத்துவம் பெற்றிருந்தன. விசுவாசிகள் கர்த்தராகிய இயேசுவை ஆராதிக்கக் கூடிவரவும், பின்பு நற்செய்தியைப் பரப்ப உலகத்திற்குள் பரவிச்செல்லவும் சீடர்கள் ஏற்பாடு செய்தனர். ""அவர்கள் ஒருமனப்பட்டவர்களாய் தேவாலயத் திலே அநுதினமும் தரித்திருந்து ...தேவனை துதித்து ஜனங்களெல்லாரிடத்திலும் தயவுபெற்றிருந்தார்கள்.''       அப். 2:46,47.

""கர்த்தராகிய இயேசுவின் உயிர்த்தெழுதலைக்குறித்து அப்போஸ்தலர்கள் மிகுந்த பலமாய்ச் சாட்சிகொடுத்தார்கள்; அவர்களெல்லார்மேலும் பூரண கிருபை உணடாயிருந்தது.'' அப். 4:33.

வசனத்தைப் பரப்புதல்

நாம் உலகத்திற்குரியவர்கள் அல்ல, ஆனால் உலகத்திற்காக உள்ளவர்கள்.

""இங்கு பணித்தளம் துவங்குகிறது'' என்று ஒரு சபையில், உறுப்பினர்கள் ஆலயத்தை விட்டுச் செல்லும்போது வாசிக்கும்படியாக எழுதப்பட்டுள்ளது. இயேசு சபைக்குக் கொடுத்த தரிசனத்தையும் குறிக்கோளையும் ஒவ்வொரு சபையும் கொள்ளவேண்டுமென அவர் விரும்புகிறார். "பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும் யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசி பரியந்தமும், எனக்கு சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.'' அப். 1:8. மத்தேயு 28:19. ""சகல ஜாதிகளையும் சீஷராக்கி'' யோவான் 20:21. ""பிதா என்னை அனுப்பினதுபோல நானும் உங்களை அனுப்புகிறேன்.''

ஒரு கல்லைக் குளத்தில் போட்டால், அது விழுந்த இடத்தை மையமாகக் கொண்டு வட்டங்கள் துவங்கி, பெரிதாகிக் கொண்டே சென்றுகொண்டிருக்கும். பரிசுத்த ஆவியான வரும் தம்முடைய ஏக்கத்தை அவ்வாறே ஒவ்வொரு சபையும் காணவேண்டுமென்று விரும்புகிறார். அதாவது, சபையின் தலைமையிடத்திலும், அடுத்து தேசமெங்கிலும், மேலும், உலகத்தின் முடிவு வரையிலும் மக்களைப் பாதிக்க வேண்டும். வெளிநாட்டு ஊழியங்களைப் பொறுத்தவரையில், "போ', "ஜெபி', "கொடு' என்பவை பொருத்தமான சொற்களாகும்.

நீங்கள் கர்த்தருடைய மிஷனெரிக் கட்டளையை அநேக வழிகளில் நிறைவேற்றலாம். ஆலயத்திற்கு மற்றவர்களை அழைத்து வருவதின்மூலம்; நட்பை ஏற்படுத்துவதின்மூலம், நாம் பணிபுரியும் இடங்கில் உப்பாக, ஒளியாக இருப்பதின் மூலம்; மத்தேயு 5:13-16; மற்றவர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போது -நமது விசுவாசத்தைப் பகிர்ந்துகொள்ளு வதின் மூலம்; கொலோசேயர் 4:5,6; நற்செய்தியை விளக்கிக் கூற ஆவியானவர் நமக்குக் கொடுக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்துவதின் மூலம்; அப். 8:34,35; இறுதியாக, மற்றவர்களை நேசிப்பதின் மூலம்; யோவான் 13:34,35.

நல்ல விளம்பரங்கள்

உங்கள் தனி வாழ்விலும், குடும்ப வாழ்விலும், தொழிலிலும், வேலையிலும் உங்களைப் பார்த்து, உங்கள் குடும்பத்தினரும், நண்பர்களும் உங்களையும் உங்கள் சபையையும் விமர்சிக்கிறார்கள். உங்கள் தனி வாழ்வில் உங்களுடைய உண்மைத்தன்மையே விசுவாசிகளின் சபையினுடைய உண்மைத்தன்மையை உறுதிசெய்யும் ஒரே வழியாகும். நாம் எப்படி வாழ்கிறோம், எப்படி நடந்துகொள்கிறோம் என்பதைப் பொறுத்தே நமது கர்த்தருடைய மதிப்பும், சபையின் மதிப்பும் நிர்ணயிக்கப்படுகிறது. நம்மை நாமே கிறிஸ்தவர் எனக் கூறிக்கொண்டு, கிறிஸ்தவ முறையில்லாத வகையில் நடந்துகொண்டால், சபைக்கு வெளியே இருப் பவர்கள் நற்செய்தியின் உண்மையைச் சந்தேகிப்பதோடு, கர்த்தரையும் வெறுப்பார்கள்.

நாம் நடந்துகொள்ளும் முறையில் கர்த்தருக்காகவும் அவர் சபைக்காகவும் பேசும் உரிமையை சம்பாதிக்க வேண்டும். ""மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்தி லிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாக பிரகாசிக்கக்கடவது.''      மத்தேயு 5:16.

நம்மில் ஒவ்வொருவரும் நமது சபைக்கு நல்ல விளம்பரமாக இருக்க வேண்டும். நமது தனிப்பட்ட வாழ்வின் மூலம் ""நற்செய்தி உங்களுக்கு நல்லது'' என்னும் செய்தியை தெரிவிக்க வேண்டும்.

உங்கள் வாக்கைக் காத்துக்கொள்ளுங்கள்

நீங்கள் உண்மையாகவும் பயனுள்ளதாகவும் பேசும்படி உங்கள் நாவைக் காத்துக் கொள்ளுங்கள். ""...பொய்யைக் களைந்து, அவனவன் பிறனுடனே மெய்யைப் பேசக் கடவன். கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து புறப்படவேண்டாம்; பக்திவிருத்திக்கு ஏதுவான நல்ல வார்த்தை உண்டானால், அதையே கேட்கிறவர்களுக்கு பிரயோஜமுண்டாகும்படி பேசுங்கள்.'' எபேசியர் 4:25,29.

கற்புள்ளவர்களாயிருங்கள்

இது செயலில் மட்டுமல்ல. வார்த்தையிலும் எண்ணத்திலும் காக்கப்பட வேண்டிய ஒன்று. இதை மனதில் வைத்தே நாம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தேர்ந்தெடுத்துப் பார்க்க வேண்டும்.

""பரிசுத்தவான்களுக்கு ஏற்றபடி, வேசித்தனமும், மற்றெந்த அசுத்தமும், பொருளாசையும் ஆகிய இவைகளின் பேர்முதலாய் உங்களுக்குள்ளே சொல்லப்படவுங்கூடாது. அப்படியே வம்பும், புத்தியீனமான பேச்சும் பரியாசமும் தகாதவைகள்; ஸ்தோத்திரம் செய்தலே தகும்.''        எபேசியர் 5:3,4.

உங்கள் சூழ்நிலைக்கு மேற்பட்டு இருங்கள்

புகார் செய்வதும், முறுமுறுப்பும் உலக வழிகள். நமக்கு எல்லாவற்றையும் கொடுத்து, பாதுகாத்து எல்லா ஆசீர்வாதங்களையும் வாக்குப்பண்ணி, நமது வாழ்க்கையைப் பொறுப்பேற்றிருக்கும் ஒரு பரம பிதா நமக்குண்டு.

""...ஜீவவசனத்தைப் பிடித்துக்கொண்டு, உலகத்திலே சுடர்களைப்போலப் பிரகாசிக்கிற நீங்கள், கோணலும் மாறுபாடுமான சந்ததியின் நடுவிலே குற்றமற்றவர்களும் கபடற்றவர்களும், தேவனுடைய மாசற்ற பிள்ளை களுமாயிருக் கும்படிக்கு, எல்லாவற்றையும் முறுமுறுப் பில்லாமலும் தர்க்கிப்பில்லாமலும் செய்யுங்கள்.''   பிலிப்பியர் 2:14,15.

உங்கள் கடன்களைச் செலுத்துங்கள்

கிரெடிட் கார்டு கடன்கள், வங்கி ஓவர் டிராப்டுகள், கடன்கள் இவற்றால் நிறைந்துள்ள நமது சமுதாயத்தில் இது எப்படிப்பட்டதொரு சாட்சியாயிருக்கும்! கடனற்ற ஒரு வாழ்க்கை எவ்வளவு வித்தியாசமானதாயிருக்கும்! கடன் மலைகளைக்  நகர்த்த கர்த்தர் வல்லவர்!

""ஆகையால் யாவருக்கும் செலுத்த வேண்டிய கடமைகளைச் செலுத்துங்கள்; எவனுக்கு வரியைச் செலுத்தவேண்டியதோ அவனுக்கு வரியையும், எவனுக்குத் தீர்வையைச் செலுத்த வேண்டியதோ அவனுக்கு தீர்வையையும் செலுத்துங்கள்; எவனுக்கு பயப்படவேண்டியதோ அவனுக்கு பயப்படுங்கள்; எவனைக் கனம்பண்ணவேண்டியதோ அவனைக் கனம்பண்ணுங்கள். ஒருவரிடத்திலொருவர் அன்புகூருகிற கடனேயல்லாமல், மற்றொன்றிலும் ஒருவனுக்கும் கடன்படாதிருங்கள்; பிறனிடத்தில் அனபுகூருகிறவன் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுகிறான்'' ரோமர் 13:7.

மற்றவர்களுக்கு மரியாதையும் கனமும் செலுத்தி, அரசாங்கத்திற்கு உண்மையான வருமானத்தை அறிவித்து, கடனற்றவர்களாயிருந்து வாழ பரிசுத்த ஆவியானவர் உதவி செய்வார். இப்படிப்பட்ட வாழ்க்கை, விசுவாசிகளல்லாத வர்கள் மனதில் கேள்விகளை எழுப்புகிறது.

உங்கள் குடும்ப வாழ்க்கை

உங்கள் விசுவாசத்தின் வல்லமைக்கு சிறந்த விளம்பரங்களில் ஒன்று மகிழ்ச்சியான குடும்பம். உங்கள் வீட்டில் நீங்கள் வாழும் முறையைப் பிறர் கவனித்துப் பார்ப்பார்கள்.

தொடர்ந்து தாக்குதல்களுக்குள்ளாகி, குடும்ப வாழ்வில் நெறி முறைகள் குறைந்துவரும் இந்நாட்களில், பரிசுத்த ஆவியின் நிறைவைப்பெற்ற விசுவாசிகளான நம்முடைய தரம், தேவ வார்த்தையில் உள்ள வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதின் மூலம் வித்தியாசமானதாக இருக்கவேண்டும்.

ஒவ்வொருவருக்கும் ஏற்ற, குடும்ப வாழ்க்கையைக் குறித்ததான வார்த்தை அவரிடம் உண்டு. ""புருஷர்களே, உங்கள் மனைவி களில் அன்புகூருங்கள்; அப்படியே கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்தார்'' எபேசியர் 5:25. ""மனைவிகளே, கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறதுபோல, உங்கள் சொந்த புருஷருக்குக் கீழ்ப்படிங்கள். கிறிஸ்து சபைக்குத் தலையாயிருக்கிறதுபோல, புருஷனும் மனைவிக்குத் தலையாயிருக்கிறன்; அவரே சரீரத்திற்கும் இரட்சகரா யிருக்கிறார். ஆகையால், சபையானது கிறிஸ்துவுக்கு கீழ்ப்படிகிறதுபோல மனைவிகளும் தங்கள் சொந்த புருஷர்களுக்கு எந்தக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்திருக்க வேண்டும்'' எபேசியர் 5:22-24.

விசுவாசியல்லாத வாழ்க்கைத் துணையையுடைய விசுவாசிக் கும் இந்த வசனங்கள் பொருந்தும். இச்சூழ்நிலையில், அப்போஸ்தலனாகிய பேதுரு, கிறிஸ்தவ மனைவிகளை ""பயபக்தியோடுகூடிய உங்கள் கற்புள்ள நடக்கையை அவர்கள் பார்த்து, போதனையின்றி உங்கள் நடக்கையினாலே அவர்கள் ஆதாயப்படுத்தப்படும்படி உங்கள் சொந்த புருஷருக்கு கீழ்ப்படிந்திருங்கள்'' 1 பேதுரு 3:1-6 என்று சொல்லி ஊக்குவிக்கிறார்.

கிறிஸ்தவ சிறுவர்களும் இளைஞர்களும் மரியாதை குறைவையும், எதிர்த்து நிற்பதையும் விட்டுவிடும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள். ""பிள்ளைகளே, உங்கள் பெற்றாருக்குக் கர்த்தருக்குள் கீழ்ப்படியுங்கள், இது நியாயம்'' எபேசியர் 6:1.

குழந்தைகள் இழிவுபடுத்தப்படும் சமுதாயத்தில், கிறிஸ்தவ தகப்பன்மார், சகிப்புத் தன்மையின் சிகரங்களாகவும், தங்கள் குழந்தைகளிடம், கரிசனையும் கவனிப்பும் கொண்டவர் களாக விளங்க வேண்டும்.

""பிதாக்களே, நீங்களும் உங்கள் பிள்ளைகளைக் கோபப் படுத்தாமல், கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும் அவர்களை வளர்ப்பீர்களாக'' எபேசியர் 6:4.

வயதான பெண்கள் தனியாக வெற்றியுள்ளதும், திருப்தி யுள்ளதுமான வாழ்க்கை வழ்வதின்மூலம், இளம் பெண் களுக்கு ஒரு முன்மாதிரியைக் காண்பிக்க வேண்டும். அவர்கள் விதவைகளாயிருந்தால், ஜெபத்தில் நேரத்தை செலவிடும்படி ஆலோசனை கூறப்படுகிறது.

உங்கள் தொழிலிலும் வேலையிலும்

உங்கள் வேலையை எப்படிச் செய்கிறீர்கள் என்பதை வைத்தே  ஒரு கிறிஸ்தவராக உங்களுக்குரிய மதிப்பையும், மரியாதையையும் பிறர் தருவார்கள். விசுவாசியில்லாதவர்கள், உங்கள் வார்த்தைகளுக்கு மதிப்பளிக்கவேண்டுமென நீங்கள் விரும்பினால், முதலாவது அவர்கள் பாராட்டும்படியாக உங்கள் வேலை இருக்கவேண்டும். ""ஒன்றிலும் உங்களுக்குக் குறைவில்லாதிருக்கும்படிக்கு, நாங்கள் உங்களுக்குக் கட்டளையிட்டபடியே, அமைதலுள்ளவர்களாயிருக்கும்படி நாடவும், உங்கள் சொந்த அலுவல்களைப் பார்க்கவும், உங்கள் சொந்தக்கைகளினாலே வேலைசெய்யவும் வேண்டுமென்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறோம்.''           1 தெச. 4:11,12.

சும்மாயிருப்பதை வேதம் கண்டிக்கிறது. நாம் யாரையும் சார்ந்திருக்கக் கற்பிக்கப்படவில்லை. ஆனால் முடிந்தவரை, நமக்காகவும், பிறரது தேவைகளுக்காகவும் உழைக்க வேண்டும். ""அமைதலோடே வேலை செய்து, தங்கள் சொந்தச் சாப் பாட்டைச் சாப்பிட வேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே அவர்களுக்குக் கட்டளையிட்டுப் புத்திசொல்லுகிறோம்''       2 தெச. 3:12.

""குறைச்சலுள்ளவனுக்குக் கொடுக்கத்தக்கதாகத் தனக்கு உண்டாயிருக்கும்படி, தன் கைகளினால் நலமான வேலை செய்து பிரயாசப்படக்கடவன்'' எபேசியர் 4:28.

தொழில் மற்றும் வேலை பற்றிய வழிகாட்டு நெறிகள்

வேலையில்லாமலிருந்தால், தீவிரமாக, தேவ ஊழியத்தையும், வேலையையும் தேடுங்கள். உங்கள் தேவைகளைச் சந்திக்கும்படியாக, விசுவாசத்துடன் தேவனை நோக்கிப் பாருங்கள். சும்மாயிருக்க வேண்டாம். ஆனால் சபையில் உங்கள் உடன் விசுவாசிகளுக்கு, உங்களாலான எல்லா வழிகளிலும் உதவிசெய்யுங்கள்.

    வேலையிலிருந்தாலோ அல்லது சுயமாகத் தொழில் செய்தாலோ, வெறும் பணத்திற்காக அல்லாமல், கர்த்தருக்காக செய்யுங்கள். எபேசியர் 6:7.

    உங்கள் எஜமானருக்குப் பணிந்து, மதிப்புகொடுங்கள். எபேசியர் 6:5-8; கொலோ. 3:22-25.

    நேர்மையானவர்களாகவும், நம்பிக்கைக்குரியவர் களாகவும் இருங்கள். தீத்து 2:10.

    நீங்கள் மேலதிகாரியாக இருந்தால், உங்களுக்குக் கீழுள்ளவர்களைப் பட்சமாகவும், நியாயமாகவும், பாரபட்சமற்றும் நடத்துங்கள். எபேசியர் 6:9; கொலோசேயர் 4:1.

உங்கள் பரமபிதாவின் இராஜ்ஜியப் பணியில் வெற்றிக்கும், பதவி உயர்வுக்குமான வாக்குறுதி உண்டு. கர்த்தராகிய இயேசுவின் புதிய மேற்பார்வையின்கீழ் உங்களுக்குக் கூடுதலான பொறுப்புகளும் வெகுமதிகளும் உண்டு. லூக்கா 16:10-12ல் நம்முடைய புதிய மேலாளர், பதவி உயர்வுக் கொள்கைகளை நமக்குக் கொடுத்திருக்கிறார்.

  சிறிய காரியங்களையும் கவனியுங்கள். அவற்றில் நீங்கள் நம்பிக்கைக்குரியவர்களாக இருக்கும்போது, பரமபிதா உங்களுக்குப் பெரிய பொறுப்புகளைக் கொடுப்பார்.

  பணத்தை ஞானமாகக் கையாளுங்கள். உலக செல்வங்களைக் கையாளுவதில் நம்பிக்கைக்குரியவ ரென்று உங்களை நிரூபிக்கும்போது, ஆவிக்குரிய செல்வங்களால் நம் பரமபிதா உங்களை நிரப்புவார்.

 மற்றவர்களின் உடமைகளை கவனமாகப் பயன் படுத்துங்கள். ""வேறொருவனுடைய காரியத்தில் நீங்கள் உண்மையுள்ளவர்களாயிராவிட்டால், உங்களுக்கு யாதொன்றைச் சொந்தமாகக் கொடுப்பவன் யார்?''        லூக்கா 16:12.

தொழிலிலும் வேலையிலும் நற்பெயர், சொந்த வாழ்வில் உண்மைத்தன்மை மேலும் சிறந்த குடும்ப வாழ்வு முதலியவை, சபையில் பொறுப்பும் தலைமைத்துவமும் கிடைக்க வழிவகுக்கும்.

உலகத்தில் நற்பெயர், தேவனுடைய வீட்டின் காரியங்களில் பொறுப்பெடுக்க ஒரு முக்கிய நிபந்தனையாகும்; மேலும் நாம் பார்த்ததுபோல் அது ஆண்டவருக்கு நல்லதொரு விளம்பரமாகும்; அப். 6:3, 1 தீமோ. 3:7.

உபத்திரவப்படுகிறவர்களை நினைவுகூருங்கள்

வார்த்தையினாலும் செயலினாலும், குணத்தினாலும் நாம் காண்பிக்கும் சாட்சி சில சமயங்களில் விசுவாசிகளல்லாத வர்களிடம் நல்லெண்ணத்தை நமக்கு சம்பாதித்துத் தரும். மற்ற சமயங்களில், இந்த சாட்சி உபத்திரவத்தைத் தூண்டிவிடும்; இது இயேசுவும் அவருடைய சீஷர்களும் ஆவிக்குரிய மக்களுக்கு வாக்குப்பண்ணினவைகள். எனினும், இப்படிப் பட்ட நேரங்களில், தனிப்பட்ட பலனையும் ஆசீர் வாதத்தையும் வாக்குப் பண்ணியிருக்கிறார்கள். ""பிரியமான வர்களே, உங்களைச் சோதிக்கும்படி, உங்கள் நடுவில் பற்றியெரிகிற அக்கினியைக் குறித்து ஏதோ புதுமை என்றெண்ணித் திகையாமல், கிறிஸ்துவின் மகிமை வெளிப் படும்போது, நீங்கள் களிகூர்ந்து மகிழும்படியாக, அவருடைய பாடுகளுக்கு நீங்கள் பங்காளிகளானதால் சந்தோஷப் படுங்கள். நீங்கள் கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் நிந்திக்கப் பட்டால் பாக்கியவான்கள்; ஏனென்றால் தேவனுடைய ஆவியாகிய மகிமையுள்ள ஆவியானவர் உங்கள்மேல் தங்கியிருக்கிறார்; அவர்களாலே தூஷிக்கப்படுகிறார்; உங்களாலே மகிமைப்படுகிறார்'' 1 பேதுரு 4:12-14.

எபிரெயர் நிருபத்தின் ஆக்கியோன் சுவிசேஷ எதிர்ப்புக் காலங்களில் துன்பப்படும் சபையைச் சேர்ந்த கிறிஸ்தவர் களை மறந்துவிடாமலிருக்கும்படி நமக்குக் கூறுகிறார். ""கட்டப் பட்டிருக்கிறவர்களோடே நீங்களும் கட்டப்பட்டவர் கள்போல நீங்களும் அவர்களை நினைத்துக்கொள்ளுங்கள்; நீங்களும் சரீரத்தோடிருக்கிறவர்களென்று அறிந்து, தீங்கு அனுபவிக் கிறவர்களை நினைத்துக்கொள்ளுங்கள்'' எபிரேயர் 13:3.

ஒன்றுசேர்ந்து ஆராதித்தல்

துதித்தலும் ஆராதித்தலும் எருசலேமிலிருந்த ஆதிக் கிறிஸ்தவர்களின் ஒழுங்கான, அன்றாட வழக்கமாயிருந்தது. ""தேவனைத் துதிப்பது'' (அப். 2:47) புதிய கிறிஸ்தவக் கலாச்சாரத்தின் ஒரு முக்கிய அங்கமாயிருந்தது.

""அவர்கள் ஒருமனப்பட்டவர்களாய் தேவாலயத்திலே அனுதினமும் தரித்திருந்து, வீடுகள்தோறும் அப்பம்பிட்டு, மகிழ்ச்சியோடும், கபடமில்லாத இருதயத்தோடும் போஜனம் பண்ணி, தேவனைத் துதித்து, ஜனங்கள் எல்லோரிடத்திலும் தயவுபெற்றிருந்தார்கள்'' அப். 2:46,47.

பரிசுத்த ஆவியானவரின் புதிய யுகத்தில் வாழ்வது, நடை முறையில் பழைய ஏற்பாட்டுப் பலியிடும் முறையை ஒழித்து, புதிய உடன்படிக்கை வழிகளை வெளிக்கொண்டு வருவ தாகும். அனைத்து பலிகளையும் ஒரு முடிவுக்குக் கொண்டு வரத் தன்னையே பழுதற்ற பலியாக ஒப்புக்கொடுத்தவர், புதிய பிரதான ஆசாரியர் இயேசுவே.

தேவாலயங்களிலும், ஜெப ஆலயங்களிலும் திட்டம் பண்ணப்பட்ட வரைமுறைகளோடு கூடிய ஆராதனை களைப் பரிசுத்த ஆவியானவரால் ஏவப்பட்ட ஆராதனை, விரைவில் மாற்றியது.

ஆசாரியர்கள் விசுவாசிகளானபோது, தங்கள் பழைய ஏற்பாட்டு முறை வஸ்திரங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, பிற விசுவாசிகள் போல் உடுத்தி, ஆசாரியர்களுக்கும், பொது மக்களுக்கும் இடையில் இனிமேலும் பிரிவினை இல்லை என்பதை செயலில் காட்டினர். பெண்களுக்காகவும், யூதரல்லாதவர்களுக்காகவும், ஆராதனைக்கூடங்களிலிருந்த பிரத்தியேகப் பகுதிகள் ஒழிக்கப்பட்டு, தேவனுக்கு ஏற்கும்படியாகப் பல இன ஆண், பெண்கள் கலந்து ஆராதிக்கும்படியான பகுதிகள் அமைக்கப்பட்டன.

ஆவியானவரால் தூண்டப்படும் துதி

கிறிஸ்தவ துதி, ஆராதனைபற்றி, புதிய ஏற்பாட்டில் வெகு சில குறிப்புகளே உள்ளன. எனினும், எழுதப்பட்டிருப்பவை, இயேசுவின் மரணம், உயிர்த்தெழுதல் மற்றும் ஆவியானவர் ஊற்றப்படுதல் இவைகளுக்குப்பின் ""ஆவியோடும் உண்மையோடும்'' யோவான் 4:24 புதுவகை ஆராதனை இருக்கும் என்ற ஆண்டவருடைய தீர்க்கதரிசனம் பற்றி ஓரளவு புரிந்துகொள்ள உதவுகிறது.

பரிசுத்த ஆவியானவரால் கிரமமாக நிரப்பப்படுதல், ""சங்கீதங் களினாலும், கீர்த்தனைகளினாலும், ஞானப்பாட்டு களினாலும் ஒருவருக்கொருவர் புத்திசொல்ல'' விசுவாசிகளுக்கு உதவுகிறது என்று பவுல் கூறுகிறார். எனவே அவர், ""உங்கள் இருதயத்தில் கர்த்தரைப் பாடிக் கீர்த்தனம் பண்ணுங்கள்'' (எபேசியர் 5:18,19) என்று அவர்களை உற்சாகப்படுத்துகிறார்.

அவர் ஒருவேளை ஆவியில் பாடுவதை மனதில் கொண்டிருக் கலாம். ஒரு நபர், ஆவிக்குரிய பாடலைத் தனியாகப் பாடுவதையோ அல்லது முழுச்சபையும் அந்நிய பாஷையில் பாடுவதையோ இது குறிக்கலாம்.

தனிநபர்களின் பங்களிப்பு

அப்போஸ்தலனாகிய பவுல் ஒருவகைக் கிறிஸ்தவ ஆராதனை முறையை விவரிக்கிறார். ஆராதனையில் ஏதாவது ஒன்றை அளிக்கத் தயாராக வந்தவர்களும், அல்லது தீர்க்கதரிசனம் போன்ற ஆவியின் வரங்களினால் தூண்டப் பட்டவர் களுமாகிய மக்களிடமிருந்து பங்களிப்புகள் இதில் அடங்கும். ""நீங்கள் கூடி வரும்போது, ஒவ்வொருவரும்...'' என்று அப்போஸ்தலர் இதைக் கூறும்போது, உதாரணமாக, ஒரு சில பங்களிப்புகளைக் குறிப்பிடுகிறார். ""...ஒருவன் சங்கீதம் பாடுகிறான், ஒருவன் போதகம்பண்ணுகிறான், ஒருவன் அந்நியபாஷையைப் பேசுகிறான், ஒருவன் இரகசியத்தை வெளிப்படுத்துகிறான், ஒருவன் வியாக் கியானம்பண்ணுகிறான். சகோதரரே, இது என்ன? சகலமும் பக்தி விருத்திக்கேதுவாகச் செய்யப்படக்கடவது''                  1 கொரிந்தியர் 14:26.

ஒரு வீட்டில் அல்லது சிறிய அறையில் நடக்கும் கூட்டங்கள் அநேக உறுப்பினர்கள் தங்கள் பங்கை நிறைவேற்ற ஏற்றதொரு வாய்ப்பை அளிக்கிறது. சபையிலுள்ள உறுப்பினர்கள் பங்களிப்புகளை, ஞாயிற்றுக்கிழமைகளில் நடக்கும் பெரிய கூட்டங்களிலும் கொடுக்க அழைக்கப் படுகிறார்கள்.

தொகுப்புரை

""அனைவரும் இணைந்து'' என்ற இந்தப் பகுதியில், சபையாகிய சமுதாயத்தில் மற்றவர்களோடு இணைந்து விசுவாசத்தை எப்படி வாழ்ந்து காட்டுவது என்பதைக்குறித்து சிறிது கண்டோம்.

பொதுவான நடவடிக்கைகளில், போதித்தல், ஐக்கியம், ஆராதனை, அப்பம் பிட்குதல், கொடுத்தல், நற்செய்திப்பணி, மேலும் ஜெபம் என்பவை அடங்கும்.

இவைகளில், எதிலாகிலும் இருந்து நாம் பின்வாங்கினால், நாம் குறைவுபடுவோம். விசுவாசிகள் மூலம் ஆவியானவர் நடப்பிக்கும் காரியங்களிலும் நாம் குறைவுபடுவோம். மேலும், சபை முழுவதற்கும் கொடுக்க நாம் ஒவ்வொருவரும் வைத்திருக்கும் முக்கிய, இன்றியமையாத பங்களிப்பைக் கொடுக்காமலேயே வைத்துக்கொள்கிறவர்களாக மாறி விடுவோம். இவைகளைக்குறித்து நாம் ஜாக்கிரதையாயிருக்க வேண்டும். 1 கொரி. 12:18--23.

 

வீட்டு பாடம்

கூடி வாழ்வதற்குரிய திறவு கோல்கள்

 கீழ்க்கண்டவற்றை வாசியுங்கள்

முக்கிய திறவுகோல் : ஜெபம்

ஒரேயொரு முக்கியமான திறவுகோல் உண்டு. அந்த முக்கிய திறவுகோல் எஜமானரிடமே உள்ளது. அவர் அதை நம்முடன் பகிர்ந்துகொள்ளுகிறார். ஒவ்வொரு வெற்றியுள்ள வளர்ச்சிக்கும், ஒவ்வொரு சிறந்த திட்டத்திற்கும், முன்னேறிச் செல்லும் ஒவ்வொரு முயற்சிக்கும் பின்னால் எப்பொழுதும் ஒரு காரியம் இருக்கிறது. அது, தொடர்ந்த, ஊக்கமான ஜெபமாகும். ஜெபமே முக்கிய திறவுகோல். இது, மிகவும் அதிக முக்கியத்துவம் கொண்டது. நான் செய்கின்ற எல்லாவற்றையும்விட மிக மேலானதாக அதை நான் மதிக்கிறேன்.

பொதுமக்கள் மத்தியில் நான் செய்யும் ஊழியத்தின் மற்ற அனைத்து பகுதிகளையும் ஆண்டவர் நீக்கிவிட்டு, மன்றாடி ஜெபிக்கின்ற என் அழைப்பை மாத்திரம் அவர் என்னிடம் விட்டுவைத்தால், நான் முழு திருப்தியடைவேன். ஜெபம் மெய்யான மாற்றத்தை உண்டாக்குகிறது. ஜெபம் வாழ்க் கையை, சபைகளை, சமுதாயங்களை மாற்றியமைக்கிறது. (கோலின் டை, ப்ரேயர் �பவுண்டேஷன்)

தலைவர்கள், ஜெபத்தைக் குறித்ததான அடுத்த வகுப்பை, முழுச்சபைக்கும் ஏற்பாடு செய்யும்போது, இந்த மன்றாட்டு ஜெபத்தின் உத்தியில், மற்றவர்களுடன் சேர்ந்து ஜெபிக்க முழு முயற்சி எடுப்பேன் என்று, இப்பொழுது நீங்கள் தீர்மானிப்பீர்களா?

உங்கள் பங்கு

இந்த சபைக்கு, என்ன பங்கை நீங்கள் கொண்டுவர முடியும் என்று கண்டுபிடிப்பதை உங்கள் குறிக்கோளாகக் கொள்ளுங்கள்.

பணக்காரியங்கள்

பணம் மற்றும் பொருள் உதவிகளை அளிப்பதற்கு, கீழ்க்கண்ட, புதிய ஏற்பாட்டு வழிகாட்டு நெறிமுறைகளை வாசியுங்கள். ஏற்கெனவே கொடுக்காவிட்டால், தசமபாகம், அன்புப் பரிசுகள் கொடுப்பதுபற்றித் திட்டவட்டமான தீர்மானங்களை எடுங்கள்.

கொடுப்பதற்குரிய வழிகாட்டு நெறிகள்

உதாரத்துவமாகக் கொடுங்கள்.

""அவனவன் தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக் கடவன்''. 2 கொரிந்தியர் .9:7.

""பெருக விதைக்கிறவன் பெருக அறுப்பான்''. 2 கொரி. 9:6.

கொடுக்கும் கிருபையில் மேலோங்க, உங்களுக்கு உதவும்படி ஆவியானவரைக் கேளுங்கள்; 2 கொரி. 8:7.

ஒழுங்காகவும், முறைப்படியும் கொடுங்கள்.

""உங்களில் அவனவன் வாரத்தின் முதல் நாள் தோறும், தன் தன் வரவுக்குத்தக்கதாக எதையாகிலும் தன்னிடத்திலே சேர்த்து வைக்கக்கடவன்'' 1 கொரி. 16:2.

தேவனுடைய இராஜ்ஜியப் பணிக்கு நிதியளிப்பதுபற்றி ஒழுங்கற்று இருக்க வேண்டாம். நீங்கள் நினைத்ததைவிடக் குறைவாகவே கடைசியில் கொடுப்பீர்கள். ஒரு வழிமுறையைக் கடைப்பிடியுங்கள்!

வாரந்தோறும் வருமானம் வந்தால், வாரந்தோறும் கொடுங்கள். மாதந்தோறும் வருமானம் வந்தால், மாதந்தோறும் கொடுங்கள். நீங்கள் பெறும் போனஸையும் சேர்த்துக் கணக்கிட மறக்க வேண்டாம்.

 

நீங்களாகவே தன்னார்வமாகக் கொடுங்கள்

தேவையுள்ளவர்களுக்கு சிறப்பான அன்புப் பரிசுகளைக் கொடுக்கும்போது, நமது விருப்பப்படி செய்யலாமென பவுல் சொல்லுகிறார். '"அவனவன் விசனமாயுமல்ல, கட்டாய மாயுமல்ல தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்''. 2 கொரிந்தியர் 9:7.

விதிமுறை என்னவென்றால்: உங்கள மனம்போல் கொடுங்கள்; நீங்கள் வழக்கமாகக் கொடுப்பதைவிட அதிகமாகவும் சொந்த விருப்பத்தின்படியும் கொடுங்கள்.

உற்சாகமாகக் கொடுங்கள்

""உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்''. 2 கொரிந்தியர் 9:7

தேவனுடைய இராஜ்ஜியத்திற்கான வேலையில் பங்கெடுப்பது எவ்வளவு மகிழ்ச்சியான ஒரு காரியம்!

""வாங்குவதைப் பார்க்கிலும் கொடுப்பதே பாக்கியம்''. அப். 20:35. கொடுப்பது நம்மை வளரச்செய்கிறது.

""கொடுப்பது என்பது தேவனுடைய பணம் சேகரிக்கும் வழியல்ல, அது அவர் பிள்ளைகளை வளர்க்கின்ற ஒரு முறையாகும்'' என்று ஒருவர் கூறினார்.

ஆராதனை உணர்வோடு கொடுங்கள்

கொடுக்கும்போது நாம் ஆண்டவரை ஆராதிக்கிறோம். கொடுக்கும்போது தேவையுள்ளவர்களை நோக்கிக் கொடுக்க வேண்டும். (உதாரணமாக, தேவையில் உள்ள ஒரு தனிநபர் அல்லது ஒரு குடும்பம்). நமது வருமானங்கள் அனைத்திற்கும் மூல ஆதாரமாயிருக்கிற தேவனை நோக்கியும் கொடுக்கப்பட வேண்டும்.

""நாங்கள் நினைத்தபடி மாத்திரம் கொடாமல், தேவனுடைய சித்தத்தினாலே முன்பு தங்களைத்தாமே கர்த்தருக்கும், பின்பு எங்களுக்கும் ஒப்புக்கொடுத்தார்கள்'' 2 கொரிந்தியர் 8:5 என்று பவுல் மக்கதொனியா சபையின் பரிசுத்தவான்களின் தியாகக் காணிக்கைகளைக் குறித்துக் குறிப்பிடுகிறார்.

சரிசமமாகக் கொடுங்கள்

ஒரு பஞ்சம் வரவிருந்தபோது, ""சீஷரில் அவரவர் தங்கள் தங்கள் திராணிக்குத் தக்கதாக யூதேயாவில் குடியிருக்கிற சகோதரருக்கு உதவியாக பணஞ்சேகரித்து அனுப்ப வேண்டுமென்று தீர்மானம் பண்ணினார்கள்'' அப். 11:29.

கொடுக்கவேண்டும் என்பதற்காக ஒவ்வொரு விசுவாசியும் ""தன்தன் வரவுக்குத்தக்கதாக எதையாகிலும் தன்னிடத்திலே சேர்த்து வைக்கக்கடவன்'' 1 கொரி. 16:2 என்று அப்போஸ்தலன் கூறுகிறார்.

கொடுப்பதின் ஒரு சிறப்புத்தன்மையானது, தேவனுடைய வழிநடத்துதலை நீங்கள் உணருகிற வேளையில், தேவன் உங்களை ஆசீர்வதிக்கிற அளவின்படி அல்லது நீங்கள் அவரை அதிகமாகச் சார்ந்திருக்கக் கற்றுக்கொள்ளுகிறபடி நீங்கள் கொடுப்பதை அதிகப்படுத்தலாம்.

தியாகத்தோடு கொடுங்கள்

தியாகத்தோடு கொடுப்பது என்பது, நீங்கள் உங்களுக்காக வைத்துக்கொள்ளாமல் கொடுப்பது; அது உங்களால் இயலாததைக் கொடுப்பது; மற்றும் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்குக் கொடுப்பது. ""நான் எவ்வளவு வைத்துக் கொள்ளலாம்?'' என்று கேட்காதீர்கள். ஆனால், ""நான் இன்னும் எவ்வளவு அதிகமாகக் கொடுக்க முடியும்?'' என்று கேளுங்கள்.

மக்கதோனிய சபை விசுவாசிகள் நமக்கு உற்சாக மூட்டுகிறவர்களாகவும், மாதிரிகளாகவும் இருக்கட்டும். ""தங்கள் திராணிக்கு மிஞ்சியும் கொடுக்க, தாங்களே மனதுள்ளவர்களாகயிருந்தார்கள் என்பதற்கு நான் சாட்சியாயிருக்கிறேன்'' 2 கொரிந்தியர் 8:3.

இந்த விசுவாசிகள், தங்களால் இயன்றதற்கும் அதிகமாகக் கொடுத்தார்கள்.

 

கொடுப்பவர்களுக்கு தேவன் அருளுபவை

நாம் உதாரத்துவமாய் கொடுக்கும்போது தேவன் பணக்காரியங்களில் ஆசீர்வதிக்கிறார் என்று வேதாகமத்தில் உள்ள அநேக சம்பவங்களின் மூலமாக தெளிவாகிறது.

""உதாரகுணமுள்ள ஆத்துமா செழிக்கும்; எவன் தண்ணீர் பாய்ச்சுகிறானோ, அவனுக்கு தண்ணீர் பாய்ச்சப்படும்''        நீதிமொழிகள் 11:25.

""சிறுக விதைக்கிறவன் சிறுக அறுப்பான், பெருக விதைக்கிறவன் பெருக அறுப்பான்'' 2 கொரி. 9:6.

""தேவனுக்கு எங்களால் ஸ்தோத்திரமுண்டாவதற்கு ஏதுவாயிருக்கும் மிகுந்த உதாரகுணத்திலே நீங்கள் எவ்விதத்திலும் சம்பூரணமுள்ளவர்களாவீர்கள்'' 2 கொரி. 9:11.

 அடுத்த பக்கம்



Tamil Unicode enabled web site
Best viewed with  Windows 2000 and Windows XP or Windows 98 with
'Latha' unicode font.

This site is best viewed using IE5.0 and above in a 800 x 600 resolution.For problems or questions regarding this web contact [email protected]
Last updated: 07/29/04 08:29:50 PM.

Hosted by www.Geocities.ws

1